"பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க", என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சனம்..!

"பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க",  என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சனம்..!

"பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க",  என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சன கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் விவரங்கள் பின்வறுமாறு:- 

 ‘நாட்டில் வறுமை ஒழியும் வரை ஓயமாட்டோம் என்று வாயால் வடை சுட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி, மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் அந்த மாநி லத்தில் பள்ளி ஆண்டு விழாவில் எல்லாம் பிரதமர் கலந்து கொள்கிறார். குவாலியர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கிறார் பிரதமர்.

"பாரதத்தில் இருந்து வறுமையை ஒழிப்பது இன்றியமையாதது. அந்த நேசத்துக்குரிய இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று அந்தப் பள்ளி விழாவில் பேசி இருக்கிறார் பிரதமர்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனதும் பேசி இருக்க வேண்டியதை. 2023 இல் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்கப் போகும் போது சொல்லி இருக்கிறார்.

இந்த ஒன்பது ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தவர்

அவர் தான், பட்டினியை ஒழிக்க என்ன செய்தார்? இரண்டாவது முறை யாக ஆட்சிக்கு வந்து அந்த இரண்டாவது முறையும் முடியப் போகும் போது, பட்டினிக்கு எதிராகப் பேசி இருக்கிறார் பிரதமர். 

சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவின் கிராமப்புறங்களில்
வாழும் மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மொத்த மக்கள்தொகையில், 25.7% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே
வாழ்கின்றனர், நகர்ப்புறங்களில், 13.7% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.

இவை அனைத்தையும் மறைத்து கடந்த ஆண்டு ஒன்றிய நீதி ஆயோக் ஒரு அறிக்கையை கொடுத்தது. 'வறுமை இல்லாத நாடாக 2022ஆம் ஆண்டு இந்தியா உருவாகும்" என நிதி ஆயோக் அறிக்கை நம்பிக்கை தெரிவித்தது. அரசுக்கு ஆலோசனை கூறும் உயர் அமைப்பான நிதி ஆயோக். '2022ஆம் ஆண்டில் இந்தியா என்ற தலைப்பிடப்பட்ட அந்தத் தொலைநோக்கு அறிக்கையில், 'உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா வளரும்: இந்தியாவில் நிலவும் வறுமை 2022ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழியும்: அதேபோல, 2022ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவாக மாறும்' என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 'சர்க்கரை' என்று எழுதினால் அந்த நாள் இனிக்குமா? ஆனால் உண்மையான நிலைமை என்ன என்பது இப்போது அம்பலமாகி விட்டது. கார்பரேட் கம்பெணிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வதும், கோடிக்கணக்கான மக்களுக்கு வறுமையைப் பரிசளிப்பதும் தான் மோடியின் பாரதம்’.

இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.