மாமல்லபுரத்தில் நள்ளிரவு கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்...

மாண்டஸ் புயல் சென்னைக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதேபோல், கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாமல்லபுரத்தில் நள்ளிரவு கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்...

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயலாக இருந்த மாண்டஸ், தற்போது வலுவிழந்து புயலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல், தற்போது 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், பலத்த சூறைக் காற்று வீசுகிறது.

மேலும் படிக்க | ”காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு படையினர்... ” - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாண்டஸ் புயல் கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல் வலுவிழக்கும் என்றும் இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல், மாண்டஸ் புயல் நள்ளிரவில் கரையை கடக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், பலத்த காற்று வீசும்போது  கடற்கரை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பட்டுக்கோட்டை விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர்...