"தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணி இல்லை" பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

"தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணி இல்லை" பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணி இல்லை என  அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருத்தவரை இதுவரை யாரிடமும் கூட்டணி இல்லை என்று முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத பொழுது எங்களை எப்படி அழைப்பார்கள் எனக் கூறிய அவர் நிச்சயமாக இந்த நாடாளுமன்ற தேர்தலை குறித்து தேமுதிக நிலைப்பாடு குறித்து கண்டிப்பாக தெரிவிப்போம் என்றார்.

ஒரு ஆட்சி என்பது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் மணல் கொள்ளை கனிம வள கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. கரூர் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது, அரசு நிர்ணயித்ததை விட ஒரு நாளைக்கு ஆயிரம் மடங்கு மணலை அள்ளிச் செல்கிறார்கள், இருக்கும் அத்தனை வளங்களையும் சுரண்டி கொண்டிருந்தால் வருங்கால சந்ததிகளுக்கு என்ன இருக்கிறது என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசி அவர், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு உண்டா, இதற்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டியவர் முதலமைச்சர், ஆனால் எது கேட்டாலும் வாங்கி தராமல் ஆளுநரை குறை சொல்லி வருகிறார்கள், ஆகையால் முதலமைச்சர் இவைகள் எல்லாம் சிந்தித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக வீட்டில் ரைடு நடக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மீதும் ரைடு நடத்தப்படும் இது எப்பொழுதும் நடக்க கூடியது தான் என தெரிவித்த அவர்  அமலாக்கத்துறையில் பொன்முடி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு அவர் கணக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இதை கேட்டால் மத்தியில் அமைச்சராக இருப்பவரும் அதே போன்று தான் இருக்கிறார்கள் என்று காரணத்தை கூறுவார்கள். ஒட்டுமொத்த திமுக கட்சியும் செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றால் இவர்கள் அனைவரும் அவரால் பலன் அடைந்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என தெரிவித்தார். ஏன் அவருக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் தர வேண்டும்? அப்படி என்றால் அரசு மருத்துவமனையில் சரியான மருத்துவம் தர இயலாமல் இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பிய அவர், அப்படி இருக்கும்போது பொதுமக்களுக்கு எப்படி நல்ல மருத்துவம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது,  அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு. கேப்டன் அவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக பல வழியில் மக்களுக்கு சேவை செய்து வளர்ந்தவர். அவரைப் போன்று இன்னொருவர் பிறந்து வந்தால் தான் உண்டு. அப்படி அதையும் மீறி வர நினைத்தால் மோசமான விளைவுகள் தான் சந்திப்பார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:மாற்றுத் திறனாளிகள் விபத்து நிவாரணம் 2 லட்சமாக உயர்வு!