அதிமுக நிர்வாகியை தாக்கிய திமுகவினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  அதிமுக நிர்வாகி ஒருவரை சரமாரியாக தாக்கிய திமுகவினரால் பரபரப்பு நிலவியது. 

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவதூராக பேசியதாக கூறப்டுகிறது. இதனை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். 

ஆனால் இதை ஏற்காத திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகிகள் அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவின் வீட்டிற்கு ஊர்வலமாக  சென்ற நிலையில் அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!