திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் - ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு இன்னும் முன் வரவில்லை என வேதனையோடு தெரிவிப்பதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் - ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

கடந்த ஆட்சி காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையாவது (DA) கிடைத்தது தற்போது அது கூட  கிடைக்கவில்லை எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் இந்தப் போராட்டத்திற்கு காரணம் அரசினுடைய நிலைமை தான் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். 

இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஜாக்டோ ஜியோவின் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகள் 6 மணிநேரம் திறந்தால் போதுமானது - நீதிமன்றம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். CPS திட்டத்தை ரத்து செய்தல்,  ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்  வெங்கடேசன், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (DA) சரண்டர், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை உதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ  இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனிக்க ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகிறது. 

அகவிலைப்படியை ஆறு மாதம் கழித்து கொடுத்து அதையும் புத்தாண்டு பரிசு என அறிவித்து அந்த அகவிலைபடியை கொடுப்பதற்கு  தமிழக அரசு கூடுதல் நிதி சுமை என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை ஜாக்டோ ஜியோ எள்ளளவும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு எள்ளளவும்  இன்னும் முன் வரவில்லை என்பதை வேதனையோடு ஜாக்டோ ஜியோ பதிவு செய்கிறது என கூறினார். 

மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வருகிற எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய இயக்க நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளோம் எனவும் எனவே தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

அரசு பணியிடங்களில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. டிஎன்பிஎஸ்சி பொறுத்தவரை 2023 இல் 1200  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே வந்திருக்கிறது. இது யானை பசிக்கு சோள பொறி போன்றது. காலி பணியிடங்களை நிரப்புவோம் என கூறிவிட்டு  முழுவதுமாக கார்ப்பரேட் நிறுவனங்களாகவும் தனியார் மையமாக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ஓய்வூதியம் என்ற வார்த்தையை குறித்து பேசுவதையே முழுவதுமாக தவிர்த்து வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையாவது (DA) கிடைத்தது தற்போது அது கூட  கிடைக்கவில்லை எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் இந்தப் போராட்டத்திற்கு காரணம் அரசினுடைய நிலைமை தான் என்றார். மேலும், கோரிக்கைகளை குறித்து ஆலோசிக்க குழு அமைத்தாலே ஆறு ஏழு மாதங்களுக்கு இதை கிடப்பில் போடுவது என்பதுதான் அர்த்தம். அந்த வகையில் இந்த அரசும் இவ்வாறே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கூறினார்.

மேலும் படிக்க | ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சிசிடிவி காட்சிகள் - உயர்நீதிமன்றம்

 கோரிக்கைகள்  :

* CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

* முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்கவேண்டும்.

* தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை உதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

* ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவேண்டும்.

* சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்தவேண்டும்.

* 7வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகயை வழங்கவேண்டும்.