தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டில்  பல்வேறு இடங்களில்  தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான கொடூரத்தைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மணிப்பூர் சம்பவத்திற்கு துரித நடவடிக்கையை மேற்கொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியபடி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மணிப்பூரில் தொடரும் கலவரம், பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணி சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நாகை அவுரி திடலில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து,  இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டோர்களுக்கு,  ஆயுள் சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை வன்கொடுமை செய்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில்  தோடர், கோத்தர், இருளர் உள்ளிட்ட ஏழு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கொட்டும் மழையிலும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க    | அரசு முதியோர் இல்லங்கள்; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!