டிடிவி தினகரன் அவரது சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்... எடப்பாடி பழனிசாமி...!!

டிடிவி தினகரன் அவரது சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்... எடப்பாடி பழனிசாமி...!!

அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கூறும் டிடிவி தினகரன் முதலில் அவரது சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி உறுப்பினர் சேர்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அதை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், விரக்தியின் விளிம்பில் பேசி வரும் ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

அதிமுக குறித்து சசிகலா கூறுவதை  பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் 2021 சட்ட மன்ற தேர்தலில் 66 பேர் வெற்றி பெறுவார்கள் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி கொடுத்தே பெரிய ஆளாக வேண்டும் என்று நினைப்பதாகவும் அவரைத் தவிர்த்து முதிர்ந்த அரசியல்வாதியைப் பற்றி தன்னிடம் கேட்குமாறும் கூறினார்.