கோலாகலமாக தொடங்கியது தசரா திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா  கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு  புகழ் பெற்ற தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு தசரா திருவிழா 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் நாளை நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. 

தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிவித்து 41 நாட்கள்,  21 நாட்களில் என விரதமிருந்த பக்தர்கள் கொடியேற்றம் நடந்த பின்பு திருகாப்பு கட்டி தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு, காளி, குரங்கு, கரடி, அம்மன், சிவன், பார்வதி, சுடலைமாடன், ராஜா, ஆஞ்சநேயர், உட்பட  பல்வேறு வேடமணிந்து குழுவாகவும் தனியாகவும் வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று 10-ம் திருநாள் கோவில் உண்டியல் காணிக்கையை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். 

இந்தநிலையில்  தசரா குழுவினர்  வேண்டுதலுக்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்து கொண்டு பல்வேறு வேடமணிந்து குழுவாக ஊர் ஊராக சென்று நையாண்டி மேளம் இசைக்க  குழுவாக ஆடி, பாடி காணிக்கை பெற்று வருகின்றனர்.