பங்காரு அடிகளார் மறைவு - முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரின்  உடலுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

மாரடைப்பு காரணமாக பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமான நிலையில் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு  செவ்வாடை அணிந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேல்மருவத்தூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டான் நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் பங்காரு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வணிகர்கள், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், அச்சரப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உள்ளதால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள புற்று மண்டபத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் தனக்கு தானே கட்டிய சமாதியிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடதக்கது.