காவிரி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு !

காவிரி விவகாரம்;  உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு !

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்கிறது. 

தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா  அரசுக்கு உச்ச நீதிமண்றம்  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்படும்  தண்ணீரை பிலிகுண்டுலுவில் அளவீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை  தமிழ்நாட்டுக்கு 53 புள்ளி 77 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு வெறும் 15 புள்ளி 73 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்து உள்ளது. 

இதையும் படிக்க : நிதி கொடுக்க மறுப்பு; ரகளையில் ஈடுபட்ட நா.த.க. நிர்வாகிகள்!

இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள், தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 37புள்ளி 97 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படாததால் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்பட அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே கர்நாடகா மாநிலம் மைசூருவில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்த நிலையில், நாளை உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனுதாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.