துப்பாக்கிச்சூடு : 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு!

துப்பாக்கிச்சூடு : 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவெடுத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேதாந்தா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையிலிருந்து காப்பர் கலந்த வாயு காற்றில் கலந்து அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த ஆலையை இழுத்து மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போரட்டம் நடத்தினர். இந்த போராட்டமானது கிட்டத்தட்ட 100 நாளை எட்டியது. சரியாக 100வது நாளன்று, அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தின்போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

விசாரணை ஆணையம்:

இதையடுத்து அப்போதைய தமிழக அரசாக இருந்த அதிமுக இந்த சம்பவம் குறித்து  உடனடியாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

விசாரணை அறிக்கை தாக்கல்:

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த ஆணையம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீசார் மீது ஆணையம் குற்றம் சாட்டியது.

விளக்கம் கேட்க முடிவு:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் திருமலை உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.