நலிவடைந்து வரும் பட்டுப் புழு வளர்ப்பு தொழில்.... விவசாயிகள் வேதனை...

நலிவடைந்து வரும் பட்டுப் புழு வளர்ப்பு தொழில்....  விவசாயிகள் வேதனை...

பட்டுக்கூடுகளுக்கு போதுமான விலை இல்லாததால் பட்டுபுழு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டுக் கூடுகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சேலையில் விலை உயர்ந்த சேலை என்றால் அது பட்டுப்புடவைதான். சுப விசேஷங்கள் நிகழும் இடங்களில் பெண்களுக்கு மதிப்பையும் மரியாதையும் அள்ளித் தருவது இந்த பட்டுப்புடவைதான். பட்டுப் புடவைக்கு பெயர் போன இடம் என்றால், அது தமிழ்நாடு தான். காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சேலம் வெண் பட்டு, பனாரஸ் பட்டு என கிட்டத்தட்ட 630 வகையான பட்டு புடவைகள் இந்தியா முழுவதும் மக்களைக்  கவர்ந்து வருகின்றன. 

இத்தனை தரம் உயர்ந்த பட்டுப் புடவைகள், பட்டுப் புழுக்களின் கூடுகளில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. 
பட்டுப் புடவைகளுக்கு பெயர் போன தென் மாவட்டங்களில் அதற்கு தேவையான பட்டுப் புழு வளர்ப்பு தொழிலும் அதிகரித்த வண்ணமே உள்ளது.  

இதையும்  படிக்க;.. காதில் பூ வைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்...! காரணம் என்ன...?

அந்த வகையில் பட்டுப் புழுக்களை வளர்க்க விவசாயிகளுக்கு அரசு மானியங்கள் வழங்கி ஊக்குவிக்கிறது. இதனால் சமீபகாலமாக பலரும் பட்டுப் புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தேனி மாவட்டத்தில் போடி, தேனி, ஆண்டிப்பட்டி ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலானது சிறந்து விளங்குகிறது.  சுமார் 7 நாட்கள் ஆன இளம்புழுக்களை அரசு விவசாயிகளுக்கு வழங்கியதையடுத்து அந்த புழுக்களுக்கு மெல்பரி இலைகளை உணவாக்கி  வளர்த்து வருகின்றனர் விவசாயிகள்  . 

அவ்வாறு மெல்பரி இலைகளை உண்ணும் இந்த புழுக்கள் வாயில் இருந்து வெளிவரும் பட்டு நூல்களைக் கொண்டு தனக்கான கூடுகளை கட்டுகின்றன. இந்த கூடுகளை விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது, பட்டுக் கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் ஒட்டு மொத்த குற்றச்சாட்டாக உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 800 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது, ஒரு கிலோ பட்டுக் கூடு 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பட்டு நூலின் விலை குறையாத நிலையில், பட்டுக் கூடுகளின் விலை மட்டும் இப்படி பாதியாக குறைந்து போனதால், பராமரிப்பு செலவுக்கு கூட வருமானம் போதவில்லை என வேதனையடைந்துள்ளனர். 

 இதையும் படிக்க;... தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!

இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதால், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர். அத்துடன் பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு வழங்கி வந்த மானியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இடைத் தரகர்களின் தலையீடு அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பட்டுக் கூடுகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.