கோவையில் களை கட்டிய தீபாவளி விற்பனை....புத்தாடைகள், பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்

ஞாயிற்றுக் கிழமை தினமான இன்று கோவையில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க கடை வீதிகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதி வருகிறது.

கோவையில் களை கட்டிய தீபாவளி விற்பனை....புத்தாடைகள், பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்

கோவையில் கொரோனா அச்சம் விலகி, கடை வீதிகளில் தீபாவளி விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. வழக்கமாக, ஆகஸ்ட்டிலேயே கோவையில் பண்டிகை கால விற்பனை களை கட்டத் துவங்கி விடும்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டில் பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப் பிங் மால்களைத் திறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. பல கட்ட ஊரடங்குகளால், கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் இதனால் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

கொரோனா பாதிப்பு சரியத் துவங்கியடுத்து அரசும், மாவட்ட நிர்வாகமும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன. இதனை அடுத்து ஷாப் பிங் மால்கள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. கோவையில் கடைகள் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் கடை வீதிகளிலும், மால்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

வார இறுதி நாட்களில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக, வாரநாட்களிலும்  விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று  ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, டி. பி.,ரோடு உள்ளிட்ட நகரின் முக்கியமான கடை வீதிகளிலும், நகரின் முக்கியமான மூன்று ஷாப் பிங் மால்களிலும், பெரிய கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுகி வருகிறது‌.\

டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள், சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக இடைவெளியைக் கடை பிடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லாத அளவுக்கு, கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதோடு, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டிருப்பதாலும், மக்களிடம் அச்ச உணர்வு குறைந்து, பண்டிகைக் கால கொண்டாட்ட மனநிலை துளிர் விட்டுள்ளது.

குறிப்பாக, நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்திருப்பதாக வர்த்தக அமைப் பினர் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் ஜவுளி விற்பனை அளவை விட இந்த ஆண்டில் 30 சதவீதம் அளவுக்கு அதிகமாக விற்பனையாவதாக ஜவுளி நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதன் எதிரொலியாக ஓட்டல்களிலும், உணவகங்களிலும், ஸ்வீட் ஸ்டால்களிலும் கூட்டம் நிரம் பி வழிகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, புதுப்புது விளம்பர யுக்திகளும் கையாளப்படுகின்றன. மொத்தத்தில் கோவை மாநகர மக்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாட உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருப்பதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது என்றே கூறலாம்.