நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில்..... மான் கொம்பு, மான் தோல், நட்சத்திர ஆமை பறிமுதல்...!

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில்..... மான் கொம்பு, மான் தோல், நட்சத்திர ஆமை பறிமுதல்...!

நெய்வேலியில்  வீட்டில் மான் தோல், மான் கொம்பு, நட்சத்திர ஆமை வைத்திருந்த என்.எல்.சி அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நான்கு மான் கொம்புகள், மான் தோல் ஒன்று, இரண்டு நட்சத்திர ஆமை, ஒரு கிளி ஆகியவற்றை கடலூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் வட்டம் 24 அண்ணா சாலையில் வசித்து வருபவர் பஞ்சநாதன் மகன் ஸ்ரீதர் (வயது 54). இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் துணை நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் மான் தோல், மான் கொம்பு, உள்ளிட்ட  பொருட்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு வன உயிரின கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.  

அதன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் பேரில் கடலூர் வனசரக அலுவலர்கள் கமலக்கண்ணன், குணசேகரன், ஆகியோர் ஸ்ரீதர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அவர் வீட்டில் மான் தோல், மான் கொம்பு, நட்சத்திர ஆமை, பச்சைக்கிளி, இருப்பது  தெரிய வந்தது. பின்னர் ஸ்ரீதரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு மான் தோல் , நான்கு மான் கொம்புகள், இரண்டு நட்சத்திர ஆமைகள் மற்றும்  ஒரு கிளி ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க }ஏரியில் விஷமருந்து கலக்கப்பட்டதா..? பத்தாயிரம் மீன்குஞ்சுகள் இறப்பு...! கிருஷ்ணகிரியில் நிகழ்த்த சோகம்...!

 நெய்வேலி என்எல்சி பொறியாளர் வீட்டில் மான் தோல் மான் கொம்பு நட்சத்திர ஆமை இருந்தது என்எல்சி ஊழியர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.