திமுக எம்.பி.க்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி.க்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பிக்களான கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது தொடரபட்ட அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு,  திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி,  கனிமொழி எம்.பி. மீதான வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல் மத்திய சென்னை திமுக எம்பி  தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.