கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்!!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை வாரியமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும் கர்நாடகா மாநில அரசு தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

இதனைக் கண்டித்து  காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்திற்கு வியாபாரிகளும்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல்,கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பால், மருந்தகங்கள் தவிர 20 ஆயிரம் கடைகளை அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் தவிர மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு வியாபாரிகள் ஆதரவளித்துள்ளனர். அதன்படி, திருவாரூர்,மன்னார்குடி , கோட்டூர் , நீடாமங்கலம் , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்து ஆட்டோக்களை இயக்கவில்லை.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்திலும் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், கொள்ளிடம் ,உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து வியாபாரிகள் ஆதரவளித்துள்ளனர்.