"நிரந்தர பணி வழங்க வேண்டும்" டெங்கு கொசு முழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் கோரிக்கை!

டெங்கு கொசு முழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள், தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு டெங்கு கொசு முழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத், ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் பொழுது ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சார்பில் ஊராட்சி அமைப்புகள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 38,000  டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், மிகக் குறைவான தினக்கூலி தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, அவ்வபோது பணியிடை நீக்கம் செய்யப்படுகிறது, ஆண்களுக்கு தனி ஊதியம் பெண்களுக்கு தனி ஊதியம் என்று வழங்கப்படுகிறது. 

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வரும் போது மட்டுமே அவர்களுக்கு பணி வழங்குகின்றனர். அவர்களின் பணி பாதுகாப்பு குறித்தும் ஊராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் பணிபுரியும் கொசு ஒழிப்பு ஊழியர்களுக்கு பணியை ஒழுங்குமுறை படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள் என்றார். தற்பொழுது 38 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த ஊழியர்கள் போதுமானதாக இல்லை எனவே 80,000 பணியாளர்களாவது இருந்தால் மட்டுமே இந்த பணியை முழுமையாக செய்ய முடியும் இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: "அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது உண்மையல்ல" டிடிவி தினகரன் பேச்சு!