பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு...! கோயிலுக்கு சீல்...!! 

பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு...! கோயிலுக்கு சீல்...!! 

பட்டுக்கோட்டை அருகே பட்டியலினத்தவருக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் மற்றும் 48 நாள் மண்டகப்படிக்கு பட்டியல் இனத்தவர்களை அங்கிருக்கும் மற்றசாதியினர் சாதிய உள்நோக்கத்தோடு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

முன்னதாக, ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி  முயற்சியில் பட்டியல் சமூக மக்கள்  திரண்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளனர். வட்டாட்சியர் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறை உதவியோடு மேற்படி கும்பாபிஷேகம் நடந்தபோது மலை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை ஒட்டி காவல்துறை உதவியுடன் கோவிலுக்குள் வந்ததால் சாமி குத்தமாகிவிட்டது; தீட்டுப்பட்டு விட்டது எனக்கு கூறி கிராமத்தில்  தலித்துகள் அல்லாத பிற சாதியினர்கள் ஒருங்கிணைந்த கிராம கட்டுப்பாடு போட்டுள்ளனர். இதன் மூலம் தலித் மக்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட வேலையை இனி கொடுப்பது கிடையாது என்றும், அவர்கள் ஒன்று சேர்ந்து  புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் இதனால் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெளியூரில் சென்று பிழைப்பு தேட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் 48 நாள் மண்டகபடியில் எங்களுக்கும் ஒரு நாளில் சாமி கும்பிட்டு அபிஷேகம் செய்வதற்கான தேதியை ஒதுக்கி கொடுங்கள் என்று மீண்டும் வட்டாட்சியர உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் பட்டியலின சமூகத்தினர் மனு கொடுத்தனர். அதன் பேரில் இரண்டு நாட்கள் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அமைதி பேச்சு வார்த்தையில் கிராம கமிட்டி தலைவர் பட்டியலினத்தவர் ஒருநாள் வழிபாடு நடத்தும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் உள்ள மலைமாரியம்மன் திருக்கோயில் மண்டலாபிஷேக திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் நாள் நடைபெறுவதற்கு ஆதிதிராவிடர் சமுதாய இனமக்கள் அளிக்கும் நன்கொடையை ஆலம்பள்ளம் கிராம கமிட்டி மறுப்பதன் மூலம் ஆதிதிராவிட மக்களை ஒதுக்குவதாக ஆலம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தகவல் தெரிவித்தந்தாலும் கிராம கமிட்டியினர் மறுப்பு ஏதும் தெரிவிக்காத்தாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உருவாகி இருந்தன.


இதனால் பிரச்சனை தீர்ந்து இயல்பு நிலை திரும்பும் வரும் வரை மலைமாரியம்மன் திருக்கோயில் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கோயில்  காவல்துறையினுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்ததோடு கோயிலுக்கு பாதுகாப்பும் அளித்துவருகின்றனர்.  இதனால் ஆலம்பள்ளம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.