எந்த கட்சி எத்தனை இடங்களை பிடித்தது... விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்...

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எந்த கட்சி எத்தனை இடங்களை பிடித்தது... விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்...

தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் கடந்த 6, 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் 9-ம் தேதியும் நடைபெற்றது.

10, 11 தேதிகளில் ஒரு சில இடங்களில் மறுவாக்குப் பதிவும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

பெரும்பாலான இடங்களில் முடிவுகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 89.54%, அதிமுக 1.31%, காங்கிரஸ் 5.23%, மற்றவர்கள் 1.96% இடங்களை பிடித்துள்ளதாகவும், 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைப் பொறுத்தவரை, திமுக 68.26%, அதிமுக 14.85%, காங்கிரஸ் 2.32%, பாஜக 0. 56%, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.28%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.21%, தேமுதிக 0.07% இடங்களையும், மற்றவர்கள் 12.46% இடங்களையும் கைப்பற்றி உள்ளதாகவும், 0.91% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் 99.2% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 0.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரையில் 97.01% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 3.1% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.