சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!!

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளையொட்டி தமிழக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு  விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இன்று வளர்பிறை சஷ்டி என்பதாலும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, பின்னர் 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதேபோல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 5. 30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்து வழிபட்டனர். வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க கோவில் சுற்றுத் தலப் பாதைகளில் தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது.