வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோலாகலம்.. திருத்தணி, திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்!!

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம், திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோலாகலம்.. திருத்தணி, திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்!!

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்வுடன் வைகாசித் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் மேள தாளங்களுடன் வள்ளி தெய்வானையுடன் சண்முகப் பெருமாள் எடுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து பக்தர்கள் குடம் குடமாக பால் அபிஷேகம் செய்த நிலையில், பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இத்திருவிழாவுக்கு யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று முத்துக்குமாரசாமி வள்ளி - தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே வைகாசி விசாக திருவிழாவிற்கு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.