அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள்...விபத்தில் பலியான சோகம்...!

அண்ணாமலையாரை  தரிசனம் செய்த பக்தர்கள்...விபத்தில் பலியான சோகம்...!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கலந்து வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி என்ன? விபத்து நடப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

மின்னல் வேகத்தில் வந்த குட்டி யானை:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் அதிகாலை சுமார் 4 மணியளவில் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று படுவேகமாக சென்று கொண்டிருந்தது. பொழிச்சலூர், ஞானமணி நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 பேர் பயணித்து வந்த அந்த குட்டி யானை வாகனம் ஜானகிபுரத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. 

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து வந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பதற்றத்துக்குள்ளானார் ஓட்டுநர். 

முன்பு கண்டெய்னர் லாரி ஒன்று மித வேகத்துடன் சென்ற நிலையில் அதன் பின்னால் 10 அடி தூரத்திலேயே துரத்திச் சென்றது டாட்டா ஏஸ்.. இந்நிலையில் முன்னே சென்ற கண்டெய்னர் திடீரென ப்ரேக் போட்ட நிலையில் வண்டியை கட்டுப்படுத்த முடியாமலும், இருபுறம் திருப்ப முடியாமலும் வேறு வழியின்றி அதன் மீது மோதியது. 

அப்பளம் போல் நொறுங்கிய வாகனம்:

இதையடுத்து பின்னால் வந்த ஈச்சர் கனரக வாகனமும் படுவேகத்தில் வந்ததால் அந்த வண்டியும் பிரேக் பிடிக்க முடியாமல் திணறிப் போய் முன்னே சென்ற ஆட்டோவின் மீது மோதியது. இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கியதில் டாட்டா ஏஸ் அப்பளம் போல நொறுங்கிப்போனது. 

படுவேகமாக மோதியதில் சரக்கு வாகனத்தில் பயணித்தவர்களில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாயினர். இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ந்து போன பொதுமக்கள் சிலர் உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர்.

உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு:

இந்த கோர விபத்தில் சந்திரசேகர், சசிகுமார், ஏழுமலை, சேகர், கோகுல், தாமோதரன் உள்பட  6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காயமடைந்தவர்களின் உடல்நிலையும் அபாயக்கட்டத்தில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. 

அதிவேகப்பயணமும், வாகனத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதுமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பிய பக்தர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.