இருதய தினத்தை ஒட்டி தருமபுரியில் விழிப்புணர்வு ஊர்வலம்!!!

சர்வதேச இருதய தினத்தை ஒட்டி தருமபுரியில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இருதய தினத்தை ஒட்டி தருமபுரியில் விழிப்புணர்வு ஊர்வலம்!!!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் இதயத்தின் செயல்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இதில் உடற்பயிற்சி செய்வோம், ஆரோக்கியமாக வாழ்வோம், தீய பழக்கங்களை தவிர்ப்போம், இதயத்தை காப்போம், பிறக்கும் முன் துடிக்க தொடங்கும் இதயத்தை, பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம், துரித உணவு தவிர்ப்போம், இதயத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

மேலும் மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, சேலம் பிரதான சாலை வழியாக நெசவாளர் காலனி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நெசவாளர் காலனியில் மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.