ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உடனான 2 நாள் மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தியது என்னென்ன?

மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் பணியின்மூலம் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான மாநாடு நடைபெற்றது. இரண்டு நாள் மாநாட்டின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், அரசு கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவுக்கான உதவித் தொகை ஆயிரத்து 100 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன்மூலம் அரசுக்கு 68 கோடியே 77 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும், மாணவர்களின் நலன் கருதி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க  : டிசம்பர் தேர்தலையொட்டி, மத்தியபிரதேசம், ராஜஸ்தானுக்கு பிரதமா் சுற்றுப்பயணம்...! 

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளிடம் நேரடியாக விசாரணை நடத்துவதில் சிக்கல் நீடிப்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்களை முழுமையான ஈடுபாட்டுடன் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் பணியின்மூலம் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் உத்தரவிட்டார்.

இதேபோல், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடனான கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.