”சினிமா வேறு, வாழ்க்கை வேறு: கனவு வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள்” - மாணவர்களுக்கு சுகி சிவம் அறிவுரை!

”சினிமா வேறு, வாழ்க்கை வேறு: கனவு வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள்” - மாணவர்களுக்கு சுகி சிவம் அறிவுரை!

சினிமாவில் காட்டுவது போல என்றைக்கும் வாழ்க்கையில் நடக்காது, கனவு வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 28ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மிக செற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்றார். 

பின்னர் விழாவில் பேசிய சுகி சிவம், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பட்டங்கள் மற்றவர்களுக்கு தான் முக்கியம் உங்களுக்கு அல்ல, சிறந்த திறமைசாலிகள் இந்த நாட்டிற்கு தேவை. எனவே, மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்ள முன்வர வேண்டும் என குறிப்பிட்டார். நாம் உயிர் பிரியும் காலம்வரை ஓய்வு என்பதே கிடையாது, நல்ல வெற்றியாளர்கள் உயிர் போகும்வரை ஓய்வெடுப்பதே இல்லை என கூறியவர், சக்ஸஸ் என்பது தேசிய நெடுஞ்சாலையை போல அது சின்ன சின்ன மாற்றத்துடன் நீண்டு கொண்டே போகும் என உதாரணத்துடன் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : மலர்களை தூவி தண்ணீரை திறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

நீங்க கனவு காண்பதை போல, சினிமாவில் பார்த்து மெய்சிலிர்த்து வியந்து போவதை போல, ஒரு பய உங்களுக்கு கிடைக்க மாட்டான். ஏன்னா, நமக்கு காட்டப்படும் கனவு வாழ்க்கை வேறு; உங்களுக்கு வசப்படும் நனவு வாழ்க்கை வேறு; கனவு வாழ்க்கையும் நனவு வாழ்க்கையும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை எனவும், வாழ்க்கை வேறு சினிமா வேறு, சினிமாவில் காட்டுவதுபோல ஒருநாளும் உங்களுக்கு நடக்காது என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது நடந்தா சந்தோஷமா இருப்பேன்; அது நடந்தா சந்தோஷமா இருப்பேன் என நினைக்காதீங்க, எது நடந்தாலும் சந்தோஷமா ஏத்துக்குங்க, அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

விழாவின் நிறைவாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு தனித்திறன் போட்டிகளில் சாதித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.