"போலி சான்றிதழ்களால், தகுதியானவர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை" உயர்நீதிமன்றம் வேதனை!

"போலி சான்றிதழ்களால், தகுதியானவர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை" உயர்நீதிமன்றம் வேதனை!

வேலை மற்றும் கல்விக்காக போலி சான்றிதழ்களை தயாரிப்பவர்களால், தகுதியானவர்களுக்கான உரிமைகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இதனால் தான், சாதி பேதமற்ற சமுதாயம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்கிற டாக்டர் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு இன்னும் கனவாக இருப்பதில் ஆச்சரியமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

பரோடா வங்கியில் கடந்த 1989 ஆம் ஆண்டு பழங்குடியினர் பிரிவில் வரக்கூடிய காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என கூறி அதற்கான ஒதுக்கீட்டில் 1989ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவ பெருமாளின் சாதிச் சான்றிதழ்  போலியானது என்றும், ஒட்டர் சமூகத்தை சேர்ந்த அவர் காட்டுநாயக்கர் என கூறி தாக்கல் செய்த சான்றிதழை ரத்து செய்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில குழு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் பெருமாளுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்கள் நிராகரிக்கபட்டன. இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ நிஷா பானு மற்றும்  என்.மாலா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

நீதிபதி நிஷா பானு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு நாடாளுமன்ற குழு நிர்ணயித்த தேதி என்பது 1995ல் இருந்து துவங்கும் நிலையில்,1989ல் பணியில் சேர்ந்த மனுதாரரின் சான்றிதழை சரிபார்த்து நிராகரித்தது தவறு என கூறி, மனுதாரருக்குக் சேர வேண்டிய அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் 8 வார காலத்திற்குள் வழங்க  பரோடா வங்கிக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி மாலா, சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  கட் ஆப் காலம் நிர்ணயித்தது அபத்தமானது என்றும், நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.  இதை  அனுமதித்தால் 1995ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த மோசடிகளை புறக்கணித்துவிட்டு, பின்னர் நடந்த மோசடிகளில் மட்டும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதாகிவிடும் என கூறியுள்ளார்.

மனுதாரரின்  சான்றிதழை ரத்து செய்தது நியாயமானது என கூறி ஓய்வுகால பயன்களை வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவரது உத்தரவில்,  துரதிர்ஷ்டவசமாக சில நேர்மையற்றவர்கள், வேலை மற்றும் கல்விக்காக போலிச் சான்றிதழ்களை தயாரிப்பதாகவும்,   இதனால், உண்மையான தகுதியுள்ள நபர்களின் உத்தரவாத உரிமைகளைப் பறிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால்  சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்தின் இலக்கை அடைய வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கனவு 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கனவாகவே நீடிக்கிறது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:"அலட்சிய போக்கில் ரயில்வே நிர்வாகம்" சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு!