கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது...

கலவரத்தை தூண்டும் வகையில் மற்றும் முதலமைச்சரை அவதூறாக பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது...

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து தக்கலையில் அனுமதியின்றி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

இதேபோல், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசினார். இது தொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சாட்டை முருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 - ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு. அதனை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திருச்சி  கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக சாட்டை முருகன் அவரை மிரட்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்து 55 நாட்களுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.