கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கிய  தசரா!!

உலகப் புகழ்பெற்ற  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கிய நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் செப்பு கொடிமரத்தில்  தசரா திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஓம் காளி,  ஜெய் காளி என்ற கோசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக  நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 24-ம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.