காவிரி விவகாரம்: "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

காவிரி விவகாரம்: "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றுத் தராமல் திமுக அரசு நாடகமாடி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலம் மாவட்டம்  ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து மாற்றுக்கட்சியை சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்டவா்  அதிமுகவில் இணைந்தனா். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவா், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கான உரிய நீரை பெற்றுத் தராமல் திமுக அரசு நாடகமாடி வருவதாக குற்றம் சாட்டினார். விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், மதுரை மாநாட்டை பார்த்து பொறாமைப் படுவதாக விமர்சித்த அவர், திமுக-வின் பி டீமாக ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் சாடினார்.

கோடாநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநர் இல்லை என்பதை மீண்டும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அவரை யாரேனும் வாகன ஓட்டுனராக பார்த்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவா்,  நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் கூறி ஏமாற்றி வாக்குகளை பெற்ற திமுக, தற்போது சப்பை காரணங்களை கூறி நாடகமாடி வருவதாகவும் விமர்சித்தார்.

இதையும் படிக்க:இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!