"விண்ணை முட்டும் காய்கறி விலை" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

"விண்ணை முட்டும் காய்கறி விலை" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் காய்கறிகள் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாக புகார் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு தொடர்ந்து மூடு விழா நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் கட்டுப்பாட்டில் இருந்த கட்டுமான பொருட்களின் விலை தற்போது 100 சதவீதம் உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் வீடு கட்டும் கனவு காலாவதியாகி உள்ளதாகவும் விமர்சித்தார். 

தொடர்ந்து, பொய் வாக்குறுதிகளை அளித்து  ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் நிபந்தனைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் அப்போது கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!