எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி...!

எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி...!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தக்க பதிலடி கொடுத்துள்ளார் .

திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய ஈ.பி.எஸ்:

வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுகவை கண்டித்து தீர்மானங்கள் சிலவற்றை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியை கடுமையாக சாடியிருந்தார். இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். 

ஈ.பி.எஸ்க்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி:

அதில், பொதுக்குழுவை  கூட்டி தன்னை தானே தலைமையாக தேர்ந்தெடுத்து கொண்டவர் தான் ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி என்றும், அவர் தேவையில்லாமல் திமுகவை சுரண்டி பார்ப்பதாகவும் சாடியுள்ளார். கட்சியில் வானகரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, திமுக மீது பழிபோட்டு பிரச்சனையை திசைதிருப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.

திமுகவை எதிர்த்து தான் அரசியல் பிழைப்பு நடத்துகிறது அதிமுக:

மேலும் அக்கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க. வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் குறை கூறிய அவர், தி.மு.க. என்பது திராவிடக் கொள்கைகளை நிலைநிறுத்துகிற இயக்கம் என்றும், ஆனால் அந்தத் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அது 'அ'.தி.மு.க. என அப்போதே  கருணாநிதி விமர்சித்ததாகவும், அதையே தான் தற்போது  பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டம் செய்து கொண்டிருப்பதாகவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

ஈ.பி.எஸ்க்கு பாஜகவை எதிர்த்து குரல் எழுப்ப தைரியம் உண்டா?:

அத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது,  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் எழுப்பினாரா என கேள்வி எழுப்பிய அவர், இப்போதும் அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலரது இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளதாகவும், திமுக மீது பொங்கி எழும் பழனிசாமி, பாஜக அரசு பழிவாங்குவதாக  முணுமுணுக்க தைரியம் உண்டா எனவும் கேட்டுள்ளார். 

ஈ.பி.எஸ்க்கு சவால் விடுத்த ஆர்.எஸ்.பாரதி:

மண்புழுவுக்கு இருக்கும் தன்மைகூட இல்லாத பழனிசாமிக்கு  தி.மு.க.வையும்,  மக்கள் நலன் காத்திட உழைத்திடும் முதலமைச்சரையும் கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை என்றும், துணிவிருந்தால், கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருடன் வருமான வரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும், அவர்களுடனான தொடர்பு பற்றியும் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.