வரும் நாட்களில் முட்டை விலை அதிகாிக்க வாய்ப்பு!

வரும் நாட்களில் முட்டை விலை அதிகாிக்க வாய்ப்பு!

வரும் நாள்களில் முட்டை விலை உயர்வதற்கான வாய்ப்புள்ளது என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். 

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு(என்இசிசி) நிர்ணயிக்கும் விலையிலேயே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த மூன்று மாதங்களாக எந்தவித தடையுமின்றி முட்டை விற்பனை நடைபெற்று வருகிறது.

இனி வரும் நாள்களிலும் மைனஸ் விலை வைக்காமல் முட்டைகளை நிர்ணய விலைக்கே வியாபாரிகளுக்கு பண்ணையாளர்கள் வழங்க வேண்டும். நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஆப்பிரிக்கா, குவைத், கத்தார், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கு தடை உள்ளது. அந்த தடையை நீக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  தற்போது முட்டை விலை ரூ.4.70–க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தீவன மூலப்பொருள்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ரூ.5.50–க்கு ஒரு முட்டை விற்பனை செய்தால் தான் கோழிப் பண்ணைத் தொழிலை நடத்த முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. வரும் நாள்களில் முட்டை விலை உயர்வதற்கான வாய்ப்புள்ளது என்றார்.

இதையும் படிக்க:"எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது" திருமா அறைகூவல்!