செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடி...அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடி...அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மற்றும் கரூரில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் ஒரு வாரத்திற்கும் மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து அங்கிருந்து முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை ஏதும் நடைபெற்று இருக்கின்றதா என்ற கோணத்தில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...அண்ணாமலைக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் பேசுவார்களா?

இதேப்போல், கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். மேலும், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீடு உள்ளிட்ட 4 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

கடந்த முறை நடந்தது போல் அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.