"அமலாக்கத்துறையை சிபிஐயுடன் இணைக்க வேண்டும்" கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்!

"அமலாக்கத்துறையை சிபிஐயுடன் இணைக்க வேண்டும்" கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்!

அமலாக்கத்துறையை சிபிஐயுடன் இணைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினனர் கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்து பின்னர் உரையாற்றிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்யதியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசுகையில், "அமலாக்க துறையை சிபிஐ உடன் இணைத்து விட வேண்டும். சிபிஐக்கு ஒழுங்கான நடத்தை விதிமுறைகள் எல்லாம் உண்டு. ஆனால் அமலாக்கத்துறைக்கு அதுபோல எந்த விதமான முறையான விதிமுறைகளும் கிடையாது. முழுக்க முழுக்க அது பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே இருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையை கலைத்து சிபிஐ உடன் இணைத்து விட வேண்டும்" என தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பாக செய்தியாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு, ஒருவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ, அது அவரது உரிமை மற்றும் சுதந்திரம் தொடர்பானது. எவரையும் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை நடிப்பது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது மருத்துவர்களின் அறிக்கையை கொச்சைப்படுத்துவது என குற்றம் சாட்டிய அவர், மருத்துவர் கொடுக்கும் அறிக்கை தான் நம்ப வேண்டுமே தவிர, யூடியூப் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப கூடாது என தெரிவித்தார்.

தொடர்ந்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவி விட்டு எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதால்தான் பல மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் 'சிபிஐ அனுமதி பெற்று தான் விசாரணை நடத்த வேண்டும்' என்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என் சுட்டிக்காட்டிய அவர்,  அந்த நடவடிக்கையை தான் தமிழக அரசும் எடுத்துள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க:மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் சரமாரி கேள்வி.