வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டில் சிக்கிய குடும்பம்... பாதுகாப்பாக மீட்டு வந்த காவல்துறையினர்...

திருச்சி மாநகரில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கைக்குழந்தையுடன் தவித்த குடும்பத்தினரை திருச்சி மாநகர காவல்துறையினர் மீட்டடனர்.

வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டில் சிக்கிய குடும்பம்... பாதுகாப்பாக மீட்டு வந்த காவல்துறையினர்...

திருச்சி மாநகர் பிராட்டியூர்  பகுதிகளில் தொடர்ந்து இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்ததாலும்,  அதேபோல புறநகர் பகுதிகளில் புறநகர் பகுதிகளில் பெய்த கன மழையால் அதிக அளவு மழை நீர் இப்பகுதி வழியாக காவிரி ஆற்றுக்கு செல்கிறது.

இந்நிலையில் திருச்சி மாநகர் பிராட்டியூர் பகுதி வர்மாநகர், முருகன் நகர், பூண்டி மாதா நகர், ஏ. ஓ.காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர்  சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்ததால், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர் .

மேலும் பிராட்டியூர் -  இனியனூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால்  அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் தவித்து வந்தனர். 

இந்நிலையில் ஈரோடு பவானி பகுதியிலிருந்து உறவினர் வீட்டுக்கு கைக்குழந்தையுடன் வந்திருந்த பெற்றோர்கள் ஊருக்கு செல்ல முடியாமல் இன்று தவித்தனர். இதுகுறித்து திருச்சி மாநகர காவல் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து பிராட்டியூர்  பகுதியிலுள்ள முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை, திருச்சி மாநகர காவல்துறை மீட்புக் குழு  பத்திரமாக மீட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் முதல் தளத்தில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.