"ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் உழவு மானியம்"  விவசாயிகள் கோரிக்கை!

தமிழ்நாட்டில் உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும் என தமிழக விவசாய பாதுகாப்பு சங்க தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் தலைமை செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். 

இந்த கூட்டத்தில், "தமிழக அரசே தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். 

மேலும், "100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உழவர்கள் அவர்களது சொந்த நிலத்திலும் உழைப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும். உழவர்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தமிழகத்தில்  உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும். தமிழக அரசு தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதைபோல் வருடம் தோறும் ஏக்கருக்கு 10,000 உழவு மானியமாக வழங்க வேண்டும். வகுப்பு வாரியம் இந்து சமய அறநிலை துறையும் இனாமிடங்களை கோவில் நிலங்கள் என்று உரிமை கொண்டாடுவதை தடை செய்து உழவர்களின் நிலஉரிமையை தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிக்க: கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; தீவிர கண்காணிப்பில் தமிழக போலீசார்!