விவசாய நிலங்களில் அறிவிப்பின்றி குழிகள் தோண்டிய வடமாநில அதிகாரிகள்; விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிவகங்கை அருகே, விவசாய நிலங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக குழிகள் தோண்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாய நிலங்களில் அறிவிப்பின்றி குழிகள் தோண்டிய வடமாநில அதிகாரிகள்; விவசாயிகள்  குற்றச்சாட்டு!

மானாமதுரை வட்டாரத்தில் நத்தப்புரக்கி, குருந்தங்குளம் உள்ளிட்ட கிராம விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வாகனங்களில் வந்த அதிகாரிகள் நான்கு அடி ஆழம் ஒரு அடி அகலத்தில் குழிகள் தோண்டி, மண் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து நில உரிமையாளர்களுக்கோ, வருவாய் துறைக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தோண்டிய குழிகளை மூடாமலேயே அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் காவிரி டெல்டா பகுதியை அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், வைகை பாயும் தென் மாவட்டங்களுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் தொடங்கியுள்ளதா என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.