விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : ஐ.ஐ.டி. குழு வருகையால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டம்!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : ஐ.ஐ.டி. குழு வருகையால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராம பகுதிகளை ஒன்றிணைத்து 5ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்திற்காக, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் விவசாயமும் தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் தங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் என்றும் விவசாயம் மட்டுமே போதும் என்றும் கூறி, ஏகனாபுரம் கிராம மக்கள் 346-வது நாளாக அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ”மத்தியப்பிரதேசம் சென்றால்கூட பிரதமருக்கு நினைவில் வருவது திமுகதான்” - முதலமைச்சர் பேச்சு!

இந்நிலையில், விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கள ஆய்வு நடத்த ஐ. ஐ.டி. குழுவினர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், திடீரென பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.