உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது...!!

 உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது...!!

கரூரில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 28 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரையிலான 110 KV உயர்மின் கோபுர மின் திட்டத்தை அமைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்னர். இந்த நிலையில் புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட இருந்த ஐந்து நபர்களை காவல்துறையினர் க.பரமத்தி பகுதியில் வழியிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து கைது நடவடிக்கையை கண்டித்து, விவசாயிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். இதில் இரண்டு பெண்கள் உட்பட 28 விவசாயிகளை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

விவசாய நிலங்களை பாதிக்கும் உயர்மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி முற்றுகை போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை கைது செய்யும்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:நாடாளுமன்ற தேர்தல்: முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ...அவரே அடுத்த பிரதமர் - உதயநிதிஸ்டாலின்!