அறுவடைக்கு தயாராகி உள்ள நெற்பயிர்களை அழிக்கும் என்.எல்.சி.நிறுவனம்!கண்ணீரில் விவசாயிகள்!!

அறுவடைக்கு தயாராகி உள்ள நெற்பயிர்களை அழிக்கும் என்.எல்.சி.நிறுவனம்!கண்ணீரில் விவசாயிகள்!!

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே விளை நிலங்களில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமித்து அங்குள்ள ஏராளமான விளை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. ஒருபுறம் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என விவசாயிகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - பொன்முடி பேச்சு! 

இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில் பச்சைப் பசலென அறுவடைக்கு தயாராக உள்ள நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து வாய்க்கால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இருப்பினும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக விழுப்புரம் சரக டிஐஜி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த 30 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்களை சிறிதும் மனிதாபிமானமின்றி காவல்துறை உதவியுடன் அழித்து வருவதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.