தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது பெண் பலி  

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது பெண் பலி   

சென்னை தேனாம்பேட்டை திரு.வி.க நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். தனியார் வங்கியில் பணியாற்றி வரும் இவருக்கு பிரதீபா என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். 9 மாத கர்ப்பிணியான பிரதீபாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதீபாவிற்கு முந்தைய குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்ததால், இந்த முறையையும் அதனையே மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

அப்போது திடீரென பிரதீபாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி, கணவர் உட்பட யாரிடமும் தெரிவிக்காமல் பிரதீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு 8 மணியளவில் அறுவை சிகிச்சையின்போது பிரதீபா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே பிரதீபா உயிரிழந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் கையெழுத்து வாங்கும் நடைமுறையை மருத்துவமனை நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும், பெண்ணின் கர்ப்பபையையும் மருத்துவர்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அகற்றியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர், மருத்துவமனை நிர்வாகம் குறித்து முறையாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களை சமாதானப்படுத்தினர்.