இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் ...!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் ...!

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை திருத்தப்பணிகள் நடைபெற்றன.  அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகளுக்காக, அதாவது பெயர் சேர்க்க 10.54 லட்சம் விண்ணப்பங்களும், திருத்தங்கள் மேற்கொள்ள 2.15 லட்சம் விண்ணப்பங்களும்  பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள்  3,04,89,866 பேரும், பெண்கள் 3,15,43,286 பேரும், 8027 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். மேலும்  3.82 கோடி வாக்காளர்கள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.  4,48,138 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும் 4,66,374 வாக்காளர்கள்  18 முதல் 19 வயதுடையவர்களாகவும் உள்ளனர்.  .அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில், 6. 66 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில்  1.70 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். ஜனவரி 1ம் தேதி 17 வயது பூர்த்தி அடைந்தாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 18 வயது பூர்ந்தியடைந்த பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களில் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.

-- சுஜிதா ஜோதி 

இதையும் படிக்க : 4.4% க்கும் அதிகமான இந்தியர்கள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு - ஆய்வில் தகவல்