பட்டாசு கடையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

ஓசூர் அருகேயுள்ள அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14- ஆக உயர்ந்துள்ளது. 

ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு லாரி மூலம் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டபோது, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14 - ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு வருகை தந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

இதையும் படிக்க : இஸ்ரேல் உருவான கதை...யூதர்கள் உருவாக்கிய நாடு...!

முன்னதாக வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்  விபத்தில் பலியான 14 பேரில் 8 பேர் தருமபுரி மாவட்டம் , அம்மாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்கள் பலியான சம்பவம் அம்மாபேட்டை கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.