நீண்ட நாட்கள் போராட்டத்துக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்..!

நீண்ட நாட்கள் போராட்டத்துக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்..!

புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு பின், காரைக்கால் மீனவர்கள் 16 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்களின் வசதிக்காக கடந்த 2009-ம் ஆண்டு மீன் பிடித்துறைமுகம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அப்போது இருந்த படகுகளின் அடிப்படையில் மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை கட்டுவதில் நெரிசல் ஏற்படும் காரணமாக படகுகள் சேதம் அடைவதாகவும், இதுகுறித்து பலமுறை அரசுக்கு தெரிவித்தும் எந்த ஒரு பயனும் இல்லை எனவும், வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட 72 கோடி ரூபாயை மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தியும், இ.பி.சி பட்டியலில் உள்ள மீனவர்களை ஏற்கனவே இருந்தது போல எம்.பி. சி பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காரைக்கால் கடற்கரை சாலையில் கடந்த 18ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் ஒன்றின் பின் ஒன்றாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.

இதையும்  படிக்க   | புலிகள் இறப்பு குறித்து தொடா் ஆய்வு - அமைச்சா் மதிவேந்தன்!