தென்காசி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு... ஒருவர் பலி..!

தென்காசியில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு... ஒருவர் பலி..!

தென்காசியில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான அச்சன்கோவில் அருகே உள்ளது கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி. கேரளா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு விபத்தின் காரணமாக தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீர்வீழ்ச்சியில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்துள்ளது.

பொதுவாக, கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சிக்கு கேரள சுற்றுலா பயணிகளை விட, தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிகம் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அடர்ந்த வனப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக கும்பவுருட்டி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது, நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அங்கிருந்த வனத்துறையினர் வெள்ளத்தில் சிக்கிய 30-க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.
அதில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் பலத்த காயம் அடைந்த நிலையில், புனலூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஒருவரையும், தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஒருவரையும் வனத்துறையினர் மீட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், புனலூரில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் என்ற நபர் தற்போது நலமாக உள்ள நிலையில், தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை சேர்ந்த குமரன் (50) என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது அச்சன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர்.இதனால் பாதுகாப்பு கருதி தற்போது வரை கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.