தலையணையில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

தலையணையில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

களக்காடு தலையணையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.

இதற்கிடையே தலையணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடிப்பதால், தண்ணீரின் வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்  சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் குறைந்த பின்னரே மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தெரிவித்தார். களக்காடு தலையணையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு நலன் கருதி பாறைகள், மண் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், தடுப்பணைக்கு கீழே செல்ல படிக்கட்டுகள், பாதுகாப்புக்காக கைப்பிடி கம்பிகள், சிமெண்டு தளமும் போடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக அளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.