புதிதாக அமைக்கப்பட்ட கரைகளில் மண் அரிப்பு... கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் வெள்ளம்...

கீழ்பவானி வாய்க்காலில் கரை பலவீனமாக உள்ள இடங்களை கண்டறிந்து சரி செய்ய பொதுப்பணித் துறையினருக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார்.

புதிதாக அமைக்கப்பட்ட கரைகளில் மண் அரிப்பு... கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் வெள்ளம்...

கடந்த 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 1000 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டது.

எனினும், வாய்க்காலில் புதிதாக கரை அமைக்கப்பட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. உடனே, பொதுப்பணித்துறையினர் சரி செய்து வந்தனர். இதற்கிடையே, பெருந்துறை அடுத்துள்ள பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட கண்ணவேலம்பாளையம் கிராமம் அருகே வாய்க்காலில் நேற்று காலை 10 மணியளவில் திடீர் உடைப்பு ஏற்பட்டு வறவன்காடு கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதன்பின், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர், கரை பலவீனமாக உள்ள இடங்களை கண்டறிந்து சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார்.