கோர்ட்டுக்கு வந்த மாரிதாசுக்கு மலர் தூவி வரவேற்பு... இந்து அமைப்பினர் செயலால் பரபரப்பு...

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸ் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் மாரி தாசுக்கு இந்து அமைப்பினர் மலர் தூவி வரவேற்பு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டுக்கு வந்த மாரிதாசுக்கு மலர் தூவி வரவேற்பு... இந்து அமைப்பினர் செயலால் பரபரப்பு...

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக கடந்த 2020 ஆம்  ஆண்டு யூடியூபர் மாரிதாஸ் சமூகவலைதளங்களில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்தது தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காஜா முகமது மீரான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் 5ல் மாரிதாஸ் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் மாரிதாஸ் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த சூழலில்  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மேலப்பாளையம் காவல்துறையினரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரண்டு மனு மீதான விசாரணை இன்றைய தினம் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் எண் 4ல் விசாரணைக்கு வந்தது. இதே வேளையில் இந்த  வழக்கை இன்று மதியம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் உயர்  நீதிமன்றத்தின் உத்தரவு நகல் மாலை வரை நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாத சூழல் காரணமாக மாரிதாஸ் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்டு நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் எண் 4ல் நீதித்துறை நடுவர் ஜெயகணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்கப் பெறாத நிலையில் மாரிதாஸ் பிணை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மற்றும் போலீஸ்  காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல்செய்த மனு ஆகிய இரண்டையும் வரும் 27ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிறுத்திவைத்து ஒத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தார். 

உயர்நீதிமன்ற உத்தரவு நகல் நீதிமன்றத்திற்கு கிடைக்கப் பெறும் நிலையில் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். வழக்கு 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மாரிதாஸ் சென்னை புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மாரிதாஸ் காண திரளான இந்து அமைப்பினர் குவிந்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது. மேலும் நீதிமன்ற வளாகத்தில் யூடிபில் மாரிதாஸ் அழைத்து வரப்பட்ட போது மலர்தூவி வரவேற்பும் அளித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.