கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - 5 பேர் மீது வழக்குப்பதிவு

பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் காவல்துறையிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - 5 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி உயிரிழப்பு

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா, கால் மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 

வலது காலில் ஜவ்வு கிழிந்திருப்பதாக கூறி தவறான அறுவை சிகிச்சை செய்த நிலையில் பிரியாவின் வலது கால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்டு உடல்நிலை மோசமான நிலையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி காலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார் மாணவி பிரியா.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மாசு

மாணவியின் மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் அலட்சியத்தால் பிரியா மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில் மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மரணத்திற்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிக்கை

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் இருவரும் தலைமறைவாகிய நிலையில் பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் காவல்துறையிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.

மேலும் படிக்க: ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு..!

இவ்வறிக்கையில் மருத்துவர்கள் பால்ராம், சோம சுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், மருத்துவ அதிகாரி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வார்டு பணியாளர் ஆகியோரின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் பிரியா இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் மீது வழக்குப்பதிவு

மருத்துவ கல்வி இயக்குநரகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர், வார்டு பணியாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

இதற்கு முன்னர் கால்பந்து வீராங்கனை பிரியாவின் வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவு என்ற பிரிவிற்கு மாற்றி கடுமையாக்கியுள்ளது காவல்துறை. அதாவது ஐபிசி 174 சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்ற பிரிவில் இருந்து ஐபிசி 304 (a) அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவில் மாற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.