ஹரி பட பாணியில் போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி... திணறும் தனிப்படை...

சினிமா பாணியில் தப்பித்த மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஹரி பட பாணியில் போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி... திணறும் தனிப்படை...

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்ததாக போலீஸ்தரப்பில் தகவல் வந்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜி தென்காசி மாவட்டம் குற்றாலம் அல்லது கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், 3 தனிப்படைகளும் அங்கு விரைந்துள்ளன.

வேலைவாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் முதலில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்தது, தற்போது தென்காசி குற்றாலம், கேரளாவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 தனிப்படை அங்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 600க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.